முதுமலை யானைகள் முகாம் பொங்கல் விழா - 2026
Автор: பல்லூயிர் தேசம்
Загружено: 2026-01-18
Просмотров: 1310
Описание:
மாட்டு பொங்கல் தினத்தன்று காலை 10 : 45 மணிக்கு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து ஊட்டி பேருந்தில் ஏறி ஊட்டிக்கு புறப்பட்டேன். சரியாக ஒரு மணி அளவில் ஊட்டியைப் பேருந்து சென்றடைந்தது. அங்கேயே ஊட்டியின் இதமான குளிரில் ஒரு சூடான தேநீர் அருந்திவிட்டு ஊட்டியிலிருந்து மசினகுடி செல்லும் பேருந்திற்காகக் காத்திருந்தேன். சரியாக ஒன்று இருபது மணிக்கு மசினககுடிக்கு செல்லும் ஒரு சிறிய அழகான பேருந்து வந்து நின்றதது. பொங்கல் திருவிழாவானதால் ஊர் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து அந்த பஸ்சில் ஏறி அமர்ந்தேன். ரம்மியமான ஊட்டி இயற்கை சூழலில் மிதமான பனியில் பஸ் ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது. வழியெங்கிலும் மலைச் சாரல்கள் இயற்கை சூழலில் தலைக்குந்தாவிலி ருந்து கல்லட்டி வழியாக மசினகுடி பயணம்.
நாம் என்னதான் பைக்கு, கார் போன்ற வாகனங்களில் எவ்வளவு தூரம் பயணித்தாலும் சில இடங்களுக்கு அந்த இயற்கை சூழலுக்கு தகுந்தார் போல் அங்கேயே இருக்கும் ஊர்திகளை பயணிக்கும் சுகம் அனுபவிக்கும்போதுதான் தெரியும் மதியம் 2 : 30 மணியளவில் பேருந்தூர் மசினகுடியை சென்றடைந்தது. அங்கே இறங்கி அங்கிருந்த மசினகுடி பேருந்து நிலையத்தில் ஒரு பெரிய ஆலமரத்திற்கீழ் அமர்ந்து எடுத்து சென்ற உணவுகளை அங்கேயே சாப்பிட்டேன். அம்மா கொடுத்த லெமன் சாதமும், கேரளா நேந்திரம் பழமும் மதிய பசியைப் போக்கியது. உணவு முடித்த பிறகு மசினகுடியிலிருந்து தெப்பக்காடுக்கு ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. உடனடியாக பஸ் கிடையாது. எப்படி செல்லலாம் என்று பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். மசினகுடியிலிருந்து தெப்பக்காடு பக்கத்திலுள்ள ஊர்களுக்கு பொதுமக்களை ஏற்றிச்செல்லும் ஜீப்பில் மசினகுடியிலிருந்து தெப்பக்காடுக்கு காட்டு வழியாக மீண்டும் ஒரு அழகான பயணத்தைத் துவக்கியது.
அந்த ஊர் மக்களோடு, அவர்களின் வாழ்வியல் சார்ந்த பேச்சுகளோடு பயணம் மிக அழகாக அமைந்தது. ஜீப்பில் சென்று கொண்டிருக்கும்போது தெப்பக்காடு யானை முகாமிற்கு சற்றே அருகில் யானைகள் குளிப்பாட்டப் பட்டு அங்கே இருக்கும் பெரிய ஆற்றிலிருந்து யானைகள் முகாமுக்கு சென்று கொண்டிருந்தன. உடனடியாக ஜீப் டிரைவரிடம் நான் இங்கேயே இறங்கிக் கொள்ளுகிறேன் என்று கேட்டு அங்கையே இறங்கிவிட்டு, யானைகளை புகைப்படம் எடுத்தேன்
பொங்கல் திருவிழா நாளாக இருந்ததால், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் பயணிகளின் வருகையால் மிகுந்த உற்சாகத்துடன் களைகட்டிக் கொண்டிருந்தது. வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களும், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்த குடும்பங்களும், நண்பர்கள் குழுக்களும்—எல்லோரின் முகத்திலும் பண்டிகை மகிழ்ச்சி தெளிவாகப் பிரதிபலித்தது.
யானைகளை நேரில் காணும் ஆவல், அவற்றோடு புகைப்படம் எடுக்கும் ஆர்வம், குழந்தைகளின் குதூகலம்—இந்த எல்லாம் சேர்ந்து அந்த இடத்தையே ஒரு திருவிழா மைதானம் போல மாற்றியிருந்தது. இருந்தாலும், கூட்டத்திற்குள் கூட ஒரு ஒழுங்கும் மரியாதையும் தெரிந்தது. யானைகளின் நடை, அவற்றின் அமைதியான பார்வை, பராமரிப்பாளர்களின் அக்கறை இந்த முகாமின் தனித்துவத்தை உணர்த்தின.
பொங்கல் நாளில் இயற்கையோடு, விலங்குகளோடு, மனிதர்களோடு சேர்ந்து கொண்டாடும் இந்த அனுபவம், ஒரு சுற்றுலா பயணம் என்ற வரையறையைத் தாண்டி, வாழ்க்கையின் ஓர் இனிய நினைவாக மனதில் பதிந்தது. அந்த உற்சாகக் கூட்டத்திற்குள் நின்றபோதும், காட்டின் அமைதி எங்கோ மறைந்தபடி இருந்தது
யானை முகாமை முடித்தபோது இரவு ஏழு மணியை கடந்துவிட்டது. மீண்டும் தெப்பக்காடு – மசினகுடி வழியாக ஊட்டி செல்ல அந்த நேரத்தில் பேருந்து இல்லை. ஆகவே தெப்பக்காட்டிலிருந்து கூடலூர் வழியாகத்தான் ஊட்டியை அடைய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. தெப்பக்காடு பேருந்து நிறுத்தத்தில் நின்று கூடலூர் செல்லும் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒரு மலையாளக் குடும்பம், தங்கள் ஜீப்பில்
“நீங்களும் கூடலூர் பக்கம் தானே? எங்களோடு வர்றீங்களா?” என்று கேட்டார்கள்.
அந்த எதிர்பாராத அன்பும் மனிதநேயமும் அந்த நாளின் இன்னொரு அழகான பரிசாகவே தோன்றியது.
அவர்களோடு ஜீப்பில் அமர்ந்ததும், பயணம் மீண்டும் ஒரு புதிய வடிவம் எடுத்தது. காட்டு இரவு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. சாலையோர மரங்களுக்குள் மறைந்து நிற்கும் இருள், இடையே கேட்கும் பூச்சிகளின் ஒலி, ஜீப்பின் ஹெட்லைட்டில் ஒளிரும் பாதை—எல்லாமே ஒரு மர்மமும் அமைதியும் கலந்த சூழலை உருவாக்கின.
மலையாளக் குடும்பத்தினரின் எளிய பேச்சு, பயண அனுபவப் பகிர்வுகள், எல்லை தாண்டிய மனித உறவின் இனிமை—இந்த எல்லாம் சேர்ந்து அந்த இரவு பயணத்தை இன்னும் நினைவாக மாற்றின. ஒருவரை ஒருவர் முன்பே அறியாத போதிலும், ஒரு பயணம் மனிதர்களை எவ்வளவு நெருக்கமாக்க முடியும் என்பதைக் அந்த ஜீப் பயணம் மீண்டும் உணர்த்தியது.
சில பயணங்கள் இடங்களை இணைக்கும்.
சில பயணங்கள் மனிதர்களை இணைக்கும்.
அந்த இரவு, தெப்பக்காட்டிலிருந்து கூடலூர் நோக்கிய அந்தச் சிறிய ஜீப் பயணம்—இரண்டையும் ஒருசேர இணைத்துக் கொண்டே சென்றது…
கூடலூர் இருந்து இரவு ஏழே முக்கால் மணிக்கு, வழக்கமாக காலை ஏழு மணிக்கு மேட்டுப்பாளையம் இருந்து புறப்பட்டு மைசூர் சென்று திரும்பி, இரவு ஏழே முக்கால் மணிக்கு கூடலூர் வந்துவிட்டு, பின்னர் இரவு பதினொன்றே முக்கால் மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும் அந்த வழக்கமான பேருந்தில் நான் ஏறி பயணத்தைத் தொடர்ந்தேன்.இருள் சூழ்ந்த அழகான மலைப் பாதையில், ஒரு சிறிய கிராம ஹோட்டலின் அருகே பேருந்து வந்து நின்றது. அங்கே இரவு உணவை முடித்துக் கொண்டு, அந்த நாளின் எல்லா அனுபவங்களும் மனதில் ஒருசேர ஓடின.
இந்த இயற்கை எவ்வளவு பெரியது!
இந்தப் படைப்பு எவ்வளவு விசாலமானது!
இங்கே நாம் புதிதாக எதையும் உருவாக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.
இருப்பவற்றைச் சரிவர காப்பாற்றினாலே
அதுவே நம் ஆன்மாவின் பரமதர்மம் என்று அந்த இரவு மலை இருட்டில் தெளிவாக உணர்ந்தேன்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: